Sunday, May 16, 2010

தமிழ் செம்மொழி மாநாடு பாடல்

பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர் , யாதும் ஊரே, யாவரும் கேளிர்!

உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம் -
உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன்மொழியே நம் பொன் மொழியாம் !

போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம் !

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம் !

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி ,
ஓதி வளரும் உயிரான உலக மொழி -

கம்பநாட்டாழ்வாரும்
கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் - தரும் ,
புத்தாடை அனைத்துக்கும்
வித்தாக விளங்கும் மொழி !

நம்மொழி - நம்மொழி - அதுவே
செம்மொழி - செம்மொழி - நம் தமிழ் மொழியாம் !
வாழிய வாழியவே ! வாழிய வாழியவே ! வாழிய வாழியவே !

1 comment:

Unknown said...

அருமையான வரிகள் வாழ்க தமிழ்